Thursday, October 18, 2007

இது புதுமை!

சித்திரங்கள் சிரித்தன!
சின்ன விரல்கள்
சிந்திய வண்ணங்கள்!
பூப்போல் எடுத்து
புன்னகையால் அணைக்க
புரியாத மொழியில்
மலர்ந்தன மின்விழிகள்!
கொஞ்சும் மழலையரின்
பஞ்சு விரல்கள்
பார்வைக்குள் பனித்தன!
பாசமென்ற கைகளுக்குள்
பனிமலராய்ப் பூத்தன!
இது புதுமை! இது புதுமை!

எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் !
பார்வை மொழியில் பனி மலரும் !
பிஞ்சு விரல்கள் அசைந்து
காலடியில் இசை பாட சுவைக்கும் !
கண்ணுக்குள் நிற்கும் கவிதை !
என்னுள் குதிக்கும் இனிமை !
இந்த மழலையரின் சொல்லுக்கு
மயங்கும் சுவைத் தேன் நான் !
சுட்டிப் பிள்ளைகள் எட்டிப்
பார்க்கும் திரை என் மனத் திரை !
மனத்திற்கு மகிழ்வூட்டும் மான்கள்
என் கண்ணின் மணிகள் !

எனக்கொன்றும் புரியவில்லை

அதென்ன அப்பா என்றால்

செய்தித்தாள் படிப்பார்!

அம்மா எப்பொழுதும்

அடுக்களையில்! சமைப்பார்!

எது நடந்தாலும் ஏன் ?

எப்படி அது அவளுக்குத்

தெரியாமல் போனது ?

இது கூடத் தெரியாவிட்டால்

இவள் என்ன பெண் ?

இசைக்கின்ற வானொலி செவியில்

பிள்ளைகளின் சீருடை

மடித்து வைத்த காலுறை

அடுக்கி வைத்த புத்தகம்

அடுத்த நாள் செய்ய வேண்டிய

இன்றைய வீட்டு வேலை!

அலுவலகம் செல்ல அமைதியாய்

இருக்கும் கைப்பை !

கட்டும் போது மடிப்பில்

தெரியும் காப்பிக் கரை!

எப்பொழுது மூச்சு விடுவாள் இவள்!

இத்தனைக்குப் பின்னும்

இவளுக்கு என்ன தெரியும்

ஏதாவது புரியுமா? இது வேத வாக்கு!

இருந்தாலும் அவள்தான் இங்கே உலகம்!

Wednesday, October 10, 2007

என் மொழி - 2 !!

சிந்தனைப் பூக்களின் தொடர்ச்சி :

---------------------------------------------------


பேசாமல் பேசும் வித்தையைக் கற்றுக் கொள் !


வள்ளுவத்தைப் படித்தால் வாழ்க்கை மேம்படும் !


வானவில்லை வளைக்க முடியாது.
ஆனால் வாழ்வை வானளவு உயர்த்தலாம் !


என்ன மனிதர்கள் இவர்கள் - எண்ணத்தால் தாழ்ந்தவர்கள் ?


எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கை வட்டப்பாதை
தான் ! ஏன் வழி தடுமாற வேண்டும் ?


சொன்னால் சிரிக்கின்ற செயல்களை எல்லாம் மனிதன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.


எண்ணத்தால் தாழ்ந்த மனிதர்கள் எளிதில் எதிர்படுவதில்லை.


பூட்டி வைத்ததிலும் திறக்க முடியாத எண்ணங்கள் மனக்கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கும்.


காற்றில் பறக்கவும், கடலில் மிதக்கவும், நிலத்தில் தாவவும், நெருப்பில் நிற்கவும் நீ என்ன தமிழா ? நினைவுகளைப் புடம் போட்டுக்கொள்; புத்துலகுக்கே சென்று வரலாம் !


காற்றடித்தால் பறப்பது குப்பைகள் மட்டுமல்ல !
கலைந்த எண்ணங்களும் தான் !


ஏற்றி விடுவதற்கு ஒருவர் இருந்தால் இறங்குவதற்குக் கூட துணை தேடுவோம் !


---------------------------------------------------------

சிந்தனைப் பூக்கள் இன்னும் பூக்கும் !

---------------------------------------------------------

Sunday, October 7, 2007

என் மொழி - 1 !!!

நீங்கள் நீங்களாக இருங்கள் !
வேறு யாராகவும் இருக்க வேண்டாம் !

ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையே
இடைவெளி குறைந்தால் உண்மை போய்விடும்.

உரிமை அதிகமாக அதிகமாக ஒழுங்கு கெட்டுவிடும்.

அமைதி ஆயிரம் எண்ணங்களைத் தரும்.

சொல்லில் தடுமாற்றம் இருக்கிறதென்றால் கருத்தில்
முரண்பாடு உள்ளதென்று பொருள்.

கேட்டுப் பெறுவது சிறப்பல்ல-
கேட்காமலே வருவது உயர்வு !

செயல்களைச் செய்யாமல் இருப்பது இயல்பன்று !

எல்லோரும் உன் கருத்தை ஏறகவேண்டும் என எதிர்பார்க்காதே !

அடுத்தவர் கருத்தை எதிர்க்காதே !

காசும் பணமும் காலங் கடந்து வருவதால் பயனில்லை !

அன்பைக் கேட்டுப் பெற முடியாது - கொடுத்துப் பெறலாம்.

பாசம் விலை பேசப்படக்கூடாது !

நமக்காகத்தான் பொருள் - பொருளுக்காக நாமில்லை !

உண்மை உள்ளத்தில் இருக்க வேண்டும் ! உதட்டில் அல்ல !

இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லை!

எல்லாச் செயலுக்கும் ஒரே முயற்சிதான் -
ஏன் வன்சொல் பேச வேண்டும் !

அன்பு எதையும் கேட்பதில்லை !

உண்மை நம்மை உயர்த்துவது !

விளையாட்டிற்குக் கூட பொய் பேசாதெ !

எல்லாவற்றையும் கேட்டுக்கொள் !
எப்போதாவது பேசு !

எதற்கெடுத்தாலும் காரணம் தேடாதே !

எதையும் தள்ளிப் போடாதே ! இயல்பாய் இரு !

எப்படிப் பார்த்தாலும் இங்கே மக்கள் - வேறுபட்டவர்கள்தான் !
உடன்பாடு என்பது உள்ளத்தில் வரவேண்டும் !
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் இன்று என்ன
செய்து கொண்டிருக்கிறோம் ?

நினைத்தது நினைத்தபோதில் கிடைத்தால் அது சொர்க்கம் !
தேவை இல்லாத போது தேவாமிர்தமே கிடைத்தாலும் பயனில்லை !

முரண்பாடு உடையது உலகம் !
உடன்பாடு ஏற்படுவது அரிது !
உழல்வது தான் எளிது !

காலங்கள் கடந்து கொண்டு தான் இருக்கும் !
நாம் நடந்து கொண்டிருக்கும் போது !
நற்பெயர் எடுப்பது என்பது எல்லோராலும்
முடியாது ! அது ஒரு சிலருக்கே வாய்க்கும் !

வாழ்க்கை என்பது வசம் தான் [வசந்தம்]
நாம் வாழ்ந்து பார்த்தால் !

எப்பொழுதுமே கடந்த காலங்கள் மேன்மையாய்
இருக்கின்றன ; நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில்
கொள்பவர்களுக்கு !

வருவதும் போவதும் தானே வாழ்க்கை !

ஊமை நெஞ்சங்கள் உறங்குவதில்லை !

செல்வி ஷங்கர்

அமைதி

ஆண்டவன் சந்நிதியில் கிடைப்பது !
அருந்தமிழின் சுவையில் திளைப்பது !
ஆற்றலின் விளிம்பில் அலை பாய்வது !
ஆசையை நினைத்து அன்பில் நிலைப்பது !
இருப்பதைக் கொடுத்து இன்முகம் காண்பது !
துயரத்தைப் போக்கி துன்பம் துடைப்பது !
மழலையின் சிரிப்பில் மடியில் காண்பது !
இன்னிசையின் மென்மையில் சுவைப்பது !
இலக்கியத்தின் இதழ்களில் மலர்வது !
நெடுந்தூரப் பயணத்தின் நிம்மதியில்
உணர்வது ! அடுத்தவ்ரின் அன்புச்
சிரிப்பில் சிந்துவது ! ஆக்கத்தின்
வளர்ச்சியில் வாழ்வது ! அமைதி !

சமுதாயம்

எதைச் செய்தாலும் குற்றம் சொல்லும் !
எப்படிக் குறை களைவது !
தன்னலச் சேற்றில் சதிராடும் !
பொதுநல மேடையைப் புறக்கணிக்கும் !
நன்மை வரும் என்றால் உண்மை
வேண்டும் செயலில் ! உழைப்பில்
உயர்வு வேண்டும் ! எத்தித்
திரியும் செயல் கூடாது ! ஏற்பதைப்
பொதுவில் வைக்க வேண்டும் !
மறைப்பதை மறுக்க வேண்டும் !
உருப்பட வேண்டும் என்றால் முதலில்
தடுப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்!
தவறுகள் களைய வேண்டும் !
தனித்தன்மை ஓங்க வேண்டும் !

Thursday, October 4, 2007

பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறந்த நாள் (05.10.2007) காணும் பெரிய பெண்ணே !
பெருமைகள் யாவும் பெற்றிடுவாய் !
அருமைச் செயல்கள் யாவும் புரிவாய் !
கொண்டான் குழந்தைகள் பேணிடுவாய் !
குடும்பம் செழிக்க குலமகள் நீயே
சிறந்திடுவாய் ! அன்பும் பண்பும்
ஆற்றும் கடமையில் சிறந்திடவே !
எல்லாம் வல்ல இறைவன் என்றும்
உனக்கே துணை புரிவான் !
வல்ல கணபதி வளர்ந்திட உன்னை
வாழ்த்திடுவார் ! என்றும் உனக்கே
எங்கள் வழிபாடு ! வாழ்க வாழ்க !
பல்லாண்டு ! வளமுடன் வாழ்க
நல்லாண்டு !
அன்புடன் செல்விஷங்கர்

Monday, October 1, 2007

வசந்தம்

இயற்கையின் இனிமை
இன்பத்தின் தனிமை
காற்றில் கரைந்த சுகந்தம்
ஆற்றில் மலர்ந்த ஆம்பல்
ஏட்டில் படர்ந்த பசுமை
பாட்டில் தவழ்ந்த மழலை
காலங்கள் தந்த கவிதை
பாலங்கள் இணைத்த பான்மை
வாழ்க்கையில் வீசிய தென்றல்
பார்க்கையில் சுவைத்த கன்னல்
வாழ்ந்தவர்க்குக் கடந்த காலம்
வாழ்பவர்க்கு நிகழ் காலம்
வருபவர்களுக்கு எதிர்காலம்
இறைமைக்கு எப்போதும் !!!!


நினைவு

நிலையாய் இல்லாதது

நிலைகளைக் கடந்தது !

காலத்தின் தத்துவம்

காலத்தால் கலைவது!

வளர்ச்சியில் உறைவது!

வாழ்க்கையில் வளர்வது!

எங்கெங்கோ ஓடி

எதையெல்லாம் தேடி

எதிர்பார்ப்பதை நாடி

ஏற்றத் தாழ்வுகளை மோதி

ஏற்பதை எதிர்கொள்வது!

இதற்கெல்லாம் விளக்கங்கள்

விளங்குவதில்லை விடியலில்

மாலைக்குள் மடிவதில்லை!

மறுநாளும் மலர்வது தான்!

வாழ்க்கை

வளர் சிதை மாற்றங்கள் உடையது

வாழ்ந்தவர் கோடி இங்கே!

வாழ்பவர் கோடி கோடி இங்கே!

வாழ்க்கை - காலங்காட்டாது!

இலக்கணத்தில் தொழிற்பெயர்!

இலக்கியத்தில் காப்பியம்!

விதிகள் இல்லாதது! விதிகளுக்குள் கட்டுப்பட்டது!

விளக்கங்கள் கூற முடியாதது!

கூறினால் அகமில்லை!

புறம் ! புறத்தினுள் புதுமையானது!

நாட்டுக்கும் மொழிக்கும் வேறுபட்டது!

நாட்டமெல்லாம் பொதுவானது!

சொல்லிக் கொடுத்த பாடமில்லை!

சொல்லாமல் கற்ற கவிதை!