Sunday, July 27, 2008

விரைவாய் வந்த வெண்பா !

பாட்டெழுதும் நேரமா ? இங்கே பசுமரத்தின்
காய்கறிகள் காலத்தில் வேக ! கனிவான
நேரத்தில் காண்கின்ற காட்சிகள் கார்போல்
கவிதையாய் வந்தன காண் !
======================================
மலையான வாழ்வில் மனத்தின் நிழல்போல்
நிலையாத நீராய் நினைவிலே ஓடும் !
விலையான பொருளுக்கு வேர்போல் ஆகும் !
கலையாத காலைப் பொழுது !
==============================================
சொல்லாத சொல்லுக்கு நீதுணை ! ஏனடி ?
கல்லாக நின்றாய் ! கனிவாய்நான் பேசும்
முன்பாக ! கன்றுகள் கண்போல் உனையே
அன்பாகப் பார்த்த கால் !
====================================================
மனதுக்குள் மாய்கின்ற மானே ! முளைத்த
விதைதானே மேலும் கிளைத்தது ! ஏனோ
படர்ந்ததோர் பந்தலாய் பாய்விரிய சேய்கள்
மனம்பார்க்க பூத்தது ஏன் ?
=========================================
பாட்டெழுதும் நேரமா இங்கே ! பரிதவிக்கும்
கூட்டுக் குருவிகள் கூடியொன்றாய் ஆடி
மகிழ அழகான மேடை எதுவெனவே
தேடுவதைக் காண்மகளே காண் !
=================================

செல்வி ஷங்கர்

Tuesday, July 22, 2008

உலகம் மலரும் !

நேற்றுப் பெய்த
மழைத் தூறல் !
சற்றே தழைத்த
ஈர மண் !
இயற்கை அளித்த
இன்பப் பரிசு !

அங்கும் இங்கும்
மேயும் ஆடுகள் !
அழகாய்ப் பறக்கும்
குருவிகள் ! ஆற்றின்
கரையில் கீரைப்
பாத்தி ! நீரோ
ஓடை நீர்தான் !
பாறைகள் தெரிய
செடிகள் முளைத்து
கொடிகள் படர்ந்த
பச்சைப் புல்வெளி !

நனைந்த சாரலில்
நிறைந்த நீர்மணல் !
காயும் வெய்யில்
சற்றே ஓய்ந்து
ஈரக் காற்றுடன்
இரவியின் கதிர்கள் !

காலில் செருப்பு
கையில் கொம்பு
தோளில் துண்டு
எண்ணெய் இன்றி
வறண்ட தலையை
கோதிய விரல்கள் !
கண்கள் சுருக்கி
காணும் கால்நடை
கையால் ஒதுக்கி
குனிந்து நடக்கும்
முதிர்ந்த மேய்ப்பான் !

ஏதோ இன்னும்
இயற்கையை நினையும்
ஈரப் புல்வெளி !
மாலை நேரம்
மேகம் மயங்கி
மரங்கள் அசைய
வீசிய காற்றில்
விண்ணில் இருந்து
ஓரிரு துளிகள் !

இதற்கே இத்தனை
ஈரம் என்றால்
சுற்றுச் சூழல்
காற்று ! மழைநீர்
மறித்துத் தேக்கி !
குப்பை கூளம்
கூர்ந்து அகற்றி !
தூரும் வாரி !
தூற்றிய மணலால்
கரைகள் உயர்த்தி !
கன்று மரங்கள்
கணக்காய் நட்டால்
நாடு செழிக்காதா ?

வெப்பக் காற்று
மறைந்து ! பூமி
குளிர்ந்து ! தூய
காற்று வீசாதா ?
பூமி வெப்பம்
தணியத் தணிய
தாரணி செழிக்காதா ?

மலையும் பனியும்
நகர்வது நின்றால்
நானிலம் அதிராதே !
ஆருயிர் அழியாதே !
காப்போம் காப்போம் !
இயற்கை காப்போம் !
உலகம் செழிக்க
உயர்ந்திடும் மரங்கள்
உவப்பாய் நடுவோம்!
உள்ளம் மகிழ்ந்தால்
உலகம் மலரும் !

செல்வி ஷங்கர் - 22082008









Sunday, July 20, 2008

புதிய அறம் பாட வந்த அறிஞன்


பாரதி !

பாதி வயதில் இப்பாருலகை விட்டுச் சென்றவன். அவன் இன்னும் மீதி வயதும் வாழ்ந்திருந்தால், இந்த பாரதத்திற்கு, வீதி அமைப்பதற்குக் கூட விதி வகுத்து விட்டுச் சென்றிருப்பான் ! அந்த செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தையாய் மட்டும் வாழ்ந்துவிட வில்லை ! விதியே ! விதியே ! என் செய நினைத்தாய் தமிழச் சாதியை ? எவ்வகை விதித்தாய் ? என்று தட்டி எழுப்பி, உடலும் உள்ளமும் சோர்ந்தால் மருந்துண்டு; ஆனால் செய்கையும் சீலமும் குன்றினால் உயிர் வாழ வழியில்லை ! என்று நமக்குணர்த்தியவன். தனி அறம் பாட வந்த அறிஞன் இவன் ! புதிய திறம் பாட வந்த மறவன் இவன் !

நாமிருக்கும் நாடு நமது என்று கூட அறியாத மக்களின் மூட நம்பிக்கைகளைத் தகர்ந்தெறிந்தவன். அறியாமை இருளை ஓட்டிய பாரதி, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ! அரண்மனை அரியணையிலும், மாட மாளிகைகளின் பஞ்சணையிலும் தூங்கிக் கிடந்த தமிழ் மொழியை, சொல் புதிது ! சுவை புதிது ! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை ! என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தவன். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! சிந்துக்குத் தந்தை ! செந்தமிழ்த் தேனீ !

சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு, மண்டை உடைந்து, வீதிகளிலெல்லாம் கட்டிப்புரள்கின்ற நிலையை அவன் கண்டானில்லை. சமயச் சண்டைகளைப் போக்க அறம் ஒன்றே போதும் என்று நினைத்தவன். மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன். அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன். சாதிப்படைக்கு மருந்தவன். நம் உள்ளத்தைத் தொட்டு, உணர்வுகளைத் தூண்டுகின்ற இந்த உண்மையை அன்றைக்கு அவன் ஒருவன் தான் துணிந்து கூறினான்.

" ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் !
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன் !
மகமது நபிக்கு மறையருள் வித்தோன் !
ஏசுவின் தந்தை ! எனப்பலரும் உருவகத்தாலே
உணர்ந்து உரைத்திடும் தெய்வம் ஒன்றே ! "

" பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் !"

என்று தெய்வ நீதி உரைத்தவன்.

இந்த நாட்டுக் கல்விக் கொள்கையின் மீது பாரதிக்கு இணையில்லாத ஈடுபாடுண்டு. கல்வியைத் தந்தால்தான் சமுதாயம் விழிப்புறும் என்பதில் நிலையாய் நின்றான். அதிலும் பெண் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும் என்றவன் நினைத்திருந்தான். எங்கேபெண் அஞ்சி அஞ்சியே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து விடுவாளோ என்ற அச்சம் பாரதிக்கு இருந்திருக்கிறது ! அதிலும் படிப்பது பாவம் என்ற சூழ்நிலையில் பெண் கல்வி அறிவு பெறாமல் போய் விடுவாளோ என்று கலங்கி இருக்கிறான் ! அவளுக்கு வாழ்க்கை உரிமைகள் இல்லாமல் நசுக்கப் பட்டு விடுவாளோ என்று ஏங்கி இருக்கிறான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு? என்ற காலத்தில் அவன் பெண்ணறம் பேசினான். பெண் முதலில் தந்தைக்கு அடிமை ! பின் கணவனுக்கு அடிமை ! பின் மக்களுக்கு அடிமை ! என்று உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் " தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வம் இந்த நாட்டிலே ! " என்று பெண்ணுரிமை பேசினான்.

அறம் என்பது கடமை !
அறம் என்பது கற்பு !
அறம் என்பது வாழ்க்கை !
அறம் என்பது நீதி !
அறம் என்பது வேதம் !
இவை அத்தனையையும் இந்தச் சமுதாயத்திற்குத் தந்தவன்.

கடமைகளைச் செய்யாதவன் இங்கே வாழ்தல் கூடாது. வாழ்க்கையின் நிலை கற்புடையதாக இருத்தல் வேண்டும். கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ; ஆணுக்கும் உண்டு ! சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் ஒழுக்க நெறி தவறாது வாழல் வேண்டும் என்று வாழ்க்கை அறம் பேசியவன். சமுதாயத்தில் நீதி தலை தூக்க வேண்டும்; அநீதியால் இழைக்கப்படும் கொடுமைகள் மறைய வேண்டும்; இல்லையெனில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று நீதி அறம் உரைத்தவன் பாரதி !

சட்டத்தை சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு சாதாரண மக்களை சந்திக்கு இழுக்கும் நிலை கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகக்கூடாது. தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தானடிமை கொள்ளலாமா ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப் படலாமா ? என்று சமுதாய ஒழூக்கம் பேசியவன் பாரதி !

இப்படி தன் பேச்சிலும் மூச்சிலும் கனவிலும் நினைவிலும் நாடு நாடென்று சிந்தித்த பாரதி இந்த நாட்டை உயர்த்துவதற்கு தனி ஒரு அறம் பாடினான் ! தன்மானத்தினை இழந்து ஒருவன் அரச வாழ்வு வாழ்வதை அறவே அவன் வெறுத்திருக்கிறான். மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பரோ ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ ? என்றான்.

வணக்கத்திற்குரியது தாய்நாடு ! அதை வணங்கு ! வாழ்த்து ! ஒற்றுமை கொள் ! என்பதே அவன் உரைத்த அரசியல் அறம் ! இது புதுமை இல்லையா ? இப்படி நாட்டின் எதிர்கால அரசியலைப் பற்றி நாட்டுப்பற்று உள்ள ஒரு உண்மைக் குடிமகனாக நின்று சிந்தித்த அவன் சிந்தனை போற்றுதற்குரியது அல்லவா ? !

செல்வி ஷங்கர் - 20082008




Sunday, July 13, 2008

இமயப்பூவே இந்திரா !

இவ்விரங்கற்பா இந்தியத் துணைக்கண்டத்தின் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி மறைந்த போது, எழுதப்பட்டு, அகில இந்திய வானொலியில், சிறுவர் சோலையில் என் செல்ல மகளால் படிக்கப் பட்டது.
-------------------------------------------------
இமயப்பூவே இந்திரா !

இந்திய வரலாறு இந்திரா இல்லாமலா ?
எண்ணிப் பாரா இமயப்பூவே ! இந்திரா !
உன்னைப் பாரா இந்தியா ! இந்தியாவா ?
இத்தனை அமைதி ! இத்தனை அமைதி !
எங்கே உறங்குகின்றாய் ?

செந்நீர்ப் பெருக்கினை காணிக்கை ஆக்கினாய் !
ஏனெங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணவா ?
நீ தீட்டாத திட்டமில்லை ! தீர்க்காத சிக்கலில்லை !
விதிக்காத சட்டமில்லை ! விலக்காத நீதியில்லை !
நின் நிகழ் காலத் திட்டங்கள் நிலையாய் உள்ளன !
அரசியல் வரலாற்றில் நீயொரு பொன்னேடு !
நின் பொன்னேட்டின் பக்கங்கள் புகழாரம் சூடும் !

இனம் வேறு ! மொழி வேறு ! மதம் வேறு !
என்று வேறுபட்ட பாரதத்தை ஒன்றாக்கினாய் !
மிக நன்றாக்கினாய் ! உலக ஒற்றுமைக்கு
குரல் கொடுத்தாய் ! வேற்றுமைக்கு கையசைத்தாய் !

மூன்றாம் உலகப் போரினை முறியடித்தாய் !
நடுவு நிலைமை நாடுகளை உருவாக்கினாய் !
கூட்டுச் சேராக் கொள்கையிலே குரல்கொடுத்தாய் !
அணுவால் அழியும் அகிலத்தைக் காத்தாய் !

அத்தனையும் போதா தென்றாநீ ! துப்பாக்கிச்
சத்தத்தில் சிக்கி தீப்பொறி ஆனாய் !
அரண்மனைத் தோட்டத்து ரோஜாவே !
நின்றன் காஷ்மீரக் கதிர்ப் பூக்கள்
காலமெலாம் கதைபேசும்.

எத்தனையோ திட்டங்கள்
இதயத்தில் ஏந்தினாய்
என்றா ! இத்தனை
குண்டுகள் துளைத்தன !
இந்தஇதயமிலா மனிதரை
ஏனோநீ காணவில்லை !

ஏற்றமிகு தோற்றத்தால் !
எடுப்பான சொல்லால் !
போற்றுகின்ற பண்பால் !
பொலிவான உடையால் !
புன்னகைப் பூக்களை !
பூக்கும் நீ !
அதிகாரம் ஆதிக்கம் செய்யும் போதே !
அங்கங்கே சிதறும் செந்நிறத் துளிகள் !
இங்கேயும் சிதறும் என்பதை மறந்தாயே !

எத்தனை இந்திரா உன்னால் இங்கே !
இனியெங்கே ஜவகரின் இந்திரா இங்கே !
கவிக்குலத்து மேதைநீ !
காவியத்தின் சீதைநீ !
காரிகையாய் வந்ததொரு கீதைநீ !

இனியும் இதயங்கள் வெடிப்பதால்
இந்திராவின் இந்தியா வடிக்கப் படுவதில்லை !
கலங்காத நெஞ்சம், எங்கும்
காற்றாக இயங்கும் என்றா ?
காவலனே கலைத்தான்
நின்னுயிர்க் கூட்டை !
கூடுதான் கலைந்தது !
கொள்கைகள் நிலைக்கும் !
இனிவரும் இந்தியா
நின்பூக்களைச் சூடும் !

கதறாத நின்னைக் கதற வைத்தார் !
காவலரா அவர் ? இல்லை ! இல்லை !
காரிகைநீ சிந்திய ரத்தம் ஒவ்வொரு
துளியும் நின் புகழ் பேசும் !
ஒற்றுமைப் பூக்களே இந்தியா !
இல்லை ! இல்லை ! இந்திரா !
==================================
ஒலி வடிவத்தினைக் கேட்க :



--------------------------------------------------

Sunday, July 6, 2008

மயிலுக்குக் குளிருமா ?

இக்கதை வல்லிம்மாவின் இரண்டு வயது பேத்திக்காக எழுதியது.
------------------------------------------------------------------------------------
ஒரு காடு - கண்ணெ மூடிக்கோ - பிள்ளையார் சாமி கும்பிட்டுக்கோ - அப்பதான் கத வரும் - இப்ப கண்ணேத் தொறந்துகிட்டு கத கேளு.

அந்தக் காட்டிலெ ஒரு மல - அந்த மலயிலெ நெரெய மரம், நெரெய செடி - அங்கே மான், கொரங்கு, எல்லாம் ஓடி விளையாண்டுட்டு இருக்கும் - மரத்துலே பாத்தா இருட்டாத் தெரியும் - நெரெய குயில் கூட்டமா இருக்கும் - வெயில் வரப்போ இடமே இல்லாம காத்து அடிக்கும் போது - அந்த இலைக்கு நடுவுலே லைட் மாதிரி வெயிலு ஒரு கோடாட்டம் வெள்ளிச் சரிகை மாதிரி வரும்.

இந்தக் காட்டிலே - ஒரு பெரிய ராசா இருந்தாரு. அவரு வேட்டைக்குப் போவாரு - அவர் கூட துணைக்கு ஆளுக எல்லாம் போவாங்க ! ஒரு நா ராசா காட்டுலே வேட்டையாடி முடிச்சிட்டு - ரொம்பக் களைப்பா ஒரு மரத்தடியில தங்குனாரு.

அப்ப மழை வர மாதிரி காத்தடிச்சுது - மேகமெல்லாம் கருப்பாயிடிச்சி - இருட்டாப் போற மாதிரி குளிர் வேற இருந்திச்சி . அந்தக் காட்டுலே நெரெய மயிலு இருந்துச்சு - நீல மயில் வெள்ள மயிலுன்னு பல வண்ண மயிலுக இருந்திச்சி. அதுலே ஒரு பெரிய மயிலுக்கு குளிர் தாங்கலே ! - நடுங்கிகிட்டே தோகையே வேற விரிச்சிக்கிச்சி.

ராசா பாத்தாரு - பாவம் அந்த மயிலு - ரொம்பக் குளிருதே - இது என்ன செய்யும் - வயசான மயிலாச்சே - அப்படின்னு யோசிச்சுக்கிட்டே எழுந்து நடந்து போனாரு - அவரு தோளிலே போட்டிருந்த சரிகைத் துண்டே எடுத்தாரு - ராசால்ல - அது நல்ல பெரிய பளபளன்னு இருந்த பட்டு சால்வை - அது சும்மா மின்னிக்கிட்டு இருந்திச்சி - அத எடுத்து குளிர்லே நடுங்கற மயிலுக்கு இதமா போத்தி விட்டாரு - பாத்தியா - மயிலுக்கு பட்டுப் போர்வை கொடுத்த ராசாவெ !

நாமளும் யாருக்காச்சும் குளிர் எடுத்தா - நம்ம கிட்டே இருக்கற போர்வையெக் கொடுத்து உதவனும் - தெரிஞ்சுதா - ராசா தான் பெரிய ஆளுல்லே ! அவரு ஏன் நடந்து போய் போர்வை போத்தனும் ? யாரங்கே ? அந்த நடுங்கும் மயிலிற்கு ஒரு போர்வை போர்த்தி குளிரிலிருந்து மயிலைக் காத்திடுக ! அப்படின்னு கட்டளை இட்டிருக்கலாமில்லே ! - ஆனா அவரு உடனே போயி அவரே போத்தி விட்டாருல்ல - மயிலக் காப்பாத்தினாருல்ல - அது போல உதவி செய்யனும்னா நாமே செய்யனும் - அடுத்தவங்களே செய்யச் சொன்னா - அது வேற மாதிரிப் போயிரும்.

நல்ல புள்ளையா வளரனும் - நல்லவங்களோட பழகனும் - நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கனும் - அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்றதக் கேட்டு நல்லவளா வளரனும் - சரியா !!!

உனக்கு ஒண்ணு தெரியுமா - எங்க பேத்தி சாமி கும்பிடும்போது - அப்பா. அம்மா, தாத்தா, பாட்டி, பாப்பா சொல்ற பேச்சக் கேக்கனும்னு சொல்லுவா. ஏன்னா - பாப்பா சொன்னா யாரு கேப்பா - அதனாலே நான் கேக்கறென்னு சொல்லுவா .

ம்ம்ம்ம் சரியா - வரட்டா

செல்வி ஷங்கர் - 06072008




Wednesday, July 2, 2008

செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் பற்றிய ஒரு பதிவு

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு. இது இயற்கை. விதைத்த விதை முளைப்பதும், முளைத்த செடி வளர்வதும், வளர்ந்த மரம் காய்ப்பதும், காய் கனியாவதும், கனி மீண்டும் விதையாவதும் அடுத்தடுத்த விளைவுகளே !

விடாமுயற்சியோடு செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் பட்டறிவு. எதிர்த்துப் போராடும் போராட்டக் குணமும், அடக்கி ஆள்கின்ற ஆதிக்க மனமும், வளர்ச்சி காண ஆள்கின்ற அரசும், செயல்களின் சேர்க்கையால் பெற்ற பெரும்பயனே !

தவமென்றால் காட்டிற்குச் சென்று கண்ணை மூடிக்கொண்டு செய்வதல்ல. மனத்தால் அக வாழ்வைத் துறந்து புறத்தால் புற வாழ்வை மேற்கொண்டு துன்பப்படுபவரின் துயர் துடைப்பதே தவம். இது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழி. எப்படித்தான் அவரால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்ததோ ! அறிந்த வரையில் சமுதாயத்தின் ஒரு சாமானியனாய் இருந்திருந்து, சர்வாதிகார அரசுக்கெல்லாம், சமுதாயத்திற்கெல்லாம் எப்படித்தான் சட்டத்தை வகுத்தானோ !

இயலாமையைக் காரணம் காட்டி இவ்வுலகில் எதையுமே செய்யாமல் எத்தித் திரிகின்ற மனப்பான்மை உள்ள மக்களிடையே, சிறிதும் இயலாதவர்கள் கூட பிறருக்கு கை கொடுக்க நினைக்கின்ற எண்ணம் மிகவும் உயர்ந்தது. அது எல்லோராலும் முடிந்ததன்று. இதைச் சொல்கின்ற போது கண்ணதாசனின் சில கருத்துகள் என் நினைவிற்கு வருகின்றன. செருப்பு இல்லை என்பவன் காலில்லாதவன் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறி தன் யதார்த்த வாழ்க்கையையே அர்த்தமுள்ள இந்து மதமாக்கிக் காட்டியது கூட ஒரு வகையில் தவம்தான்.

எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர் - விடாமுயற்சியோடு செயல்படுபவர். இவ்வுலகில் செயல்களைச் செய்யக் கூடியவன் மறு உலகிலும் அதன் பயனைப் பெறுவான். அதுவே தவம். அதனால் தான் அத்தகைய செயல்கள் இங்கும் செய்யப் படுகின்றன. நம் ஒவ்வொரு செயலும் நம் மறுமைக்கு வழி காட்டுவதாய் இருத்தல் வேண்டுமென்பது தான் அனைத்து வேதங்களின் சாரம்.

தன்னுடைய செயல்களைத் தானே செய்துகொள்ள முடியாத நிலையிலும், நான் ஒன்றைச் செய்வேன்; செய்வதன் மூலம் பயன்பெறுவேன்; பெற்ற பயனைப் பிறருக்குக் கொடுப்பேன்; அதுவும் என் போன்று இயலாதவற்கு ஏழ்மையைப் போக்க உதவுவேன் என்கின்ற இந்த நூற்றாண்டுக் கர்ணன் அந்தோணி முத்து செய்தவம் ஈண்டு முயலப்படும் என்றால் செய்தே முடித்துக்காட்டுவான். அவனின் செயல்பாடுகள் இணையத்தில் எல்லோரூம் அறிந்தது தானே ! அப்படி என்றால் இயலாதவர்க்கு மட்டும் தான் முயற்சி என்பதல்ல. அனைவருமே விடா முயற்சியோடு செயல்பட்டு செயல்பயனைப் பெற வேண்டும் என்பது தான் செய்தவத்தின் பொருள். இங்கே செய்தால் அங்கே கணக்கில் கொள்ளப்படும் ! இது எந்தக் கணக்கியல் தத்துவத்திலும் இவ்வுலகில் அடங்காது.

செல்வி ஷங்கர் - 02.07.2008