Monday, August 11, 2008

யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !

தொட்டில் பிள்ளை
கட்டில் வந்தால்
துன்பம் !

எட்டிப் பார்க்கும்
வயதில் ஏக்கம்
வந்தால் துன்பம் !

தட்டிக் கதவை
தாண்டிப் பார்க்கும்
தழைத்த வயதில்
சோகம் !

முட்டி மோதி
முகத்தின் பொலிவில்
வளர்ந்த இளமை
வாசம் மலர
சோகம் !

சுற்றும் சூழல்
கற்ற கல்வி
கையில் உள்ள
காகிதப் பட்டம் !

ஏறி இறங்கும்
இளமை முறுக்கு !
ஏக்கம் ! தூக்கம் !
எட்டிப் பார்க்க
எடுத்து வைத்த
காலடிகள்!

கணக்குப் பார்க்கும்
காசுகள் ! கையை
விரிக்க ! கால்கள்
ஓடும் ஓட்டம் !

நினைத்துப் பார்த்த
கனவுகள் எல்லாம்
காலச் சக்கரம் !
நிலையாய் நிற்க.

மூச்சு வாங்கினால்
முக்கால் வயது
ஓடி விட்டது !
முதுமை மட்டுமே
கட்டி அணைக்க
காத்து நின்றது !

காகிதப் பட்டம்
கழனி வயலாய் !
கைகள் ஊன்றி
பயிரை வளர்த்தது !

பறவைகள் ! விலங்குகள் !
பார்த்து விரட்ட
பக்கம் ஆட்கள் !
பொத்திப் பொத்திப்
பொறுமை போனது !
ஆசை ! அன்பு !
உணர்வு ! உள்ளம் !
எல்லாம்
மூடிய கதவுகள் !

வளர்ந்த வயதும்
வாழப் பார்த்த
வடிவும் ! வடிகால்
தேட அலைந்த
பார்வையும் !

பாசம் வளர்த்தே
பகிர்ந்து கொள்ள
நட்பாய் ! உறவாய் !
யாரும் இல்லா
இயந்திர ஓட்டம் !

இரும்பைக் கூட
தட்டிப் பார்த்து
அடித்து நிமிர்த்தி
அடங்கும் வகையில்
சேர்க்கும் உலகம்
மனத்தை மட்டும்
மக்கள் இடையே
பாரா முகமாய்
ஓரம் கட்டி
ஒழிப்ப தேனோ ?

சுற்றி நிற்கும்
தொட்டால் சுருங்கி
உலகம் !
கட்டி வளைத்து
ஒரு கடிவாளம்
இட்டது !

உலகின் ஆசை
ஊரின் ஆசை
உறவின் ஆசை
எல்லாம் !
ஓசைப் படாமல்
ஒதுங்கிக் கொண்டது !

உலகம் என்பது
கூட்டிக் கழித்து
நீட்டி நிமிர்ந்து
ஒருகோடு கிழித்தது !
கிழித்த கோடு
கூடாய் அமைய
கொடி மரம்
அசைந்து
நிழலும்
காற்றும்
அங்கே சூழ்ந்தது !

குஞ்சுகள் இரண்டு
கொஞ்சி மகிழ
இயந்திர உலகம்
இளகி விரைந்தது !
கட்டம் கட்டி
கட்டுக்குள் வளைய
காவியம் படித்தது!
காலப் பறவை
பறந்தது ! இது தான்
இங்கேஉலகம் எவர்க்கும் !

செல்விஷங்கர் - 11.08.2008
----------------------------------







9 comments:

ராமலக்ஷ்மி said...

//யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !"//
என ஆரம்பித்து அடுத்தடுத்து அத்தனை சோகங்களையும் சொல்லி வந்து..

//இரும்பைக் கூட
தட்டிப் பார்த்து
அடித்து நிமிர்த்தி
அடங்கும் வகையில்
சேர்க்கும் உலகம்
மனத்தை மட்டும்
மக்கள் இடையே
பாரா முகமாய்
ஓரம் கட்டி
ஒழிப்ப தேனோ ? //
என உறைக்கும்படி உரைத்து..

//இது தான்
இங்கேஉலகம் எவர்க்கும் !//
என்பதை உணர்த்தி விட்டீர்கள்.

அருமை.

தமிழ் said...

அருமையான வரிகள்

/மூச்சு வாங்கினால்
முக்கால் வயது
ஓடி விட்டது !
முதுமை மட்டுமே
கட்டி அணைக்க
காத்து நின்றது !/

செல்விஷங்கர் said...

ராமலக்ஷ்மி

எப்படிப் பார்த்தாலும் இது தான் உலகம் இங்கே எல்லார்க்கும் - அதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

திகழ் மிளிர்

காத்திருக்கின்ற காலங்கள், தொழில் முதல் பொருளாதாரம் வரை - வாழ்வில் இளமை முதல் முதுமை வரை ஓடியதை நினைத்தால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

இன்பம் துன்பம்
இரண்டுமின்றி
வாழ்க்கை
இனிக்காது!!!

அழகாய் உணர்த்தும்
அருமையான படைப்பு

கோவிந்தசாமி
http://anbullaamma.wordpress.com

Anonymous said...

இன்பம் துன்பம்
இரண்டுமின்றி
வாழ்க்கை
இனிக்காது!!!

அழகாய் உணர்த்தும்
அருமையான படைப்பு

கோவிந்தசாமி
http://anbullaamma.wordpress.com

Raajaguru said...

செல்வி ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்,

தங்கள் கவிதைகளைப் படித்தேன். தாங்கள் மரபு கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் மகிழ்ச்சியுற்றேன்.

நான் தற்போது உலகத் தமிழ் மரபுக் கவிஞர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
அதற்காக orkut இணையதளத்தில் "தமிழ் மரபுக் கவிதைகள்" என்ற பெயரில் ஒரு குழுமத்தை(orkut community) உருவாக்கியுள்ளேன்.
குழுமத்திற்கு மரபுக் கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து வண்ணம் உள்ளனர்.
இக்குழுமத்தில் இணைவதால் பல மரபுக் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் காணவும், அவர்களின் கவிதைகள் குறித்து கருத்தாடவும் கூடும்.
நாம் இவ்வாறு இணைவதன் மூலம் மரபுக் கவிஞர்களை மேலும் ஊக்குவிக்கவும், இன்னும் பல மரபுக் கவிஞர்கள் தோன்றவும் கூடும்
தாங்களும் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் தங்களையும் "தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

orkutல் இணைய: www.orkut.com

"தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தின்(orkut community) முகவரி: http://www.orkut.co.in/Community.aspx?cmm=49272456

orkutல் என்னுடைய பக்கம்: http://www.orkut.co.in/Profile.aspx?uid=10865675864455679557

என்றும் அன்புடன்
இராஜகுரு.

tamilraja said...

இரும்பைக் கூட
தட்டிப் பார்த்து
அடித்து நிமிர்த்தி
அடங்கும் வகையில்
சேர்க்கும் உலகம்
மனத்தை மட்டும்
மக்கள் இடையே
பாரா முகமாய்
ஓரம் கட்டி
ஒழிப்ப தேனோ ? //
/
/
/ அருமை இந்த கவிதை !

செல்விஷங்கர் said...

ராஜகுரு, நியூ சினிமா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி