Saturday, December 27, 2008

இயற்கை மாற்றம் .......... !

மாலைக் கதிரவனே !
அப்படி என்ன மகிழ்ச்சி ?
மார்கழி மாலையில்
மகிழ்வாய்த் தோன்றுகிறாய் !

வட்டமிட்டு வரைந்தாற்போல்
கார்மேகக் கூட்டத்தில்
கலைநயமாய்க் காண்கின்றாய் !

செக்கச் சிவந்த
செந்தனலாய் ! சிதறாமல்
அள்ளி வைத்த தீப்பந்தாய் !
விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !

கட்டிடச் சுவரில்
காக்கைப் பள்ளிக்கூடம் !
கலைந்த மேகங்கள் !
களையாக நடுவில் நீ !
கரும் பச்சை இலைகள் !
காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றுகள் !
கவின் மாலைப் பொழுதின்
காவியமாய் நீ !
மலைகளின் மடியில்
மகிழ் வட்டம் !

பனிக்காற்று பார்வை பட்டு
பரவசமாய்ப் பறவைக் கூட்டம் !
கூட்டுக்குச் செல்லும் குதூகலத்தில்
வரிக்கோடாய் வானில்
சிறகடித்துச் சிலிர்க்கும்
சின்னஞ்சிறு பறவைகள் !

தீர்க்கமாய்ப் பார்க்கின்ற
பார்வையில் பரவசமாய்
பரந்து கிடக்கும் இயற்கை !
பருவ மழையின் பசுமை !

எப்படி நிகழ்ந்தது ?
எப்படி நிகழ்ந்தது !
இந்த இயற்கையின் மாற்றம் !
----------------------------
செல்வி ஷங்கர்
----------------------------

11 comments:

செல்விஷங்கர் said...

கதிரவனின் பார்வையில் கார்மேகங்கள் - பார்த்து விட்டுச் சொல்லுங்களேன் -எப்படி இருந்ததென்று .......

தேவன் மாயம் said...

///தீர்க்கமாய்ப் பார்க்கின்ற
பார்வையில் பரவசமாய்
பரந்து கிடக்கும் இயற்கை !
பருவ மழையின் பசுமை !///

உங்க பார்வை ரொம்ப தீர்க்கமாக உள்ளது!!!
தேவா..

சதங்கா (Sathanga) said...

//விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !//

அனுபவச் சுவை அப்படியே வார்த்தைகளில் அள்ளி வீசியிருக்கிறீர்கள். அருமை.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா

செல்விஷங்கர் said...

அன்பின் சதங்கா

அனுபவம் எப்பொழுதும் கைகொடுக்கும். வருகைக்கு நன்றி சதங்கா

தமிழ் said...

அருமை

செல்விஷங்கர் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்

geevanathy said...

////செக்கச் சிவந்த
செந்தனலாய் ! சிதறாமல்
அள்ளி வைத்த தீப்பந்தாய் !
விரிந்த வானத்தின்
வீதிகள் நடுவே
திட்டமிட்டு இட்ட
திலகமே நீ !
////

அழகான கவிதை
வாழ்த்துக்கள்......

பாச மலர் / Paasa Malar said...

அருகில் இருந்து இக்காட்சியைப் பார்த்தது போன்ற ஒரு உணர்வு..வார்த்தைகளின் பலத்தால்..

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கராசா ஜீவராஜ்

செல்விஷங்கர் said...

அன்பின் பாசமலர்

அருகில் இருந்து பார்க்கும் உணர்வைத் தூண்டும். அது தான் கவிதை

அதுதான் இயற்கை

நல்வாழ்த்துகள்