Friday, December 10, 2010

அதுதான் முதுமையோ !

மாறும் உலகில் புதுமை !
பழமை நினைவில் நிகழ்வு !
அன்பு மனத்தில் அமைதி !
ஆற்றும் செயலில் அருமை !
பழகும் நட்பில் உறவு !
பண்பாய்ப் பழகிய பெரியோர் !
வளர்ந்து விட்ட மழலையர் !
படித்துச் சுவைத்த கருத்துகள்!
எல்லாம் நினைவில் இனிமை !
என்றும் கருத்தில் இளமை !
நிகழ்வில் மட்டும் தனிமை!
அது தான் வாழ்வில் முதுமையோ !

Wednesday, December 8, 2010

என் எழுத்து வலையில்

எழுதுவதற்கு ஏடும்
படிப்பதற்கு நூலும்
கைக்கெட்டும் இடத்தில் !

அமர்வதற்கு இருக்கை !
ஆற அமரப் பார்ப்பதற்கு
அழகான காட்சி காலதரில் !

அன்பான சிந்தனையில்
அருமையான பாட்டு
வானொலியில் !

மின் விசிறி இல்லாத மென் காற்று
மாலை நேரப் பறவையாய்
மழலையரின் வருகை !

கைப்பிடித்து ! காரில் !
பாசமுள்ள தந்தையின் தோளில் !
பார்வைப் புன்னகை !
மின்னும் விழிகள் !
வித விதமாய் உடைகள் !
பொம்மைகள் போலே
மழலையர் !

சுதந்திர உடையில்
இறகுப் பந்துகள்
இங்கும் அங்கும் துள்ள
இளமென் நடையினர் !

இவரெல்லாம் என் சிந்தையில் !
சில நேரம் என் எழுத்து வலையில் !


செல்வி சங்கர்

Sunday, October 3, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..




அன்பின் சுஜா!

அருமைப் பிறந்தநாள் இன்று!
இனிமைகள் சேர்க்கும் என்றும்!
ஆண்டுகள் இயங்கும் மேலே
நாமும் இயற்றுவோம் மேன்மை!
பிள்ளைகள் வளர்ச்சி பெருமை!
பெற்றோர் மகிழும் உண்மை!
ஆடிஓடி ஆற்றுவோம் கடமை!
இயக்கம் ஒன்றே இயல்பு!
இறைவன் படைத்த உலகில்!
இனிதாய் செய்தால் வழிபாடு!
தலைவன் மகிழ, தமிழ் போல் வாழ்க!
தந்தவர் மகிழ, தரணியில் வாழ்க!
பிள்ளைகள் மகிழ, பெரிதும் உயர்க!
போற்றும் கடவுள்
பொன்கர மூர்த்தி!
புனிதனே அருள்வான்!
இனிய கணபதி
இதயத்தில் உறைவான்!
என்றும் வாழ்க!!!


அன்புடன்
அப்பா! அம்மா!
பிரியா!! மணி!!
நாதன்!!! நீனா!!!

Saturday, September 4, 2010

எங்கே ? எங்கே ?

குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !
நேற்றைய நிலைமை திரும்புமா ?
நிலம் வெடிக்கும் வெக்கை மாறுமா ?
அடுக்கு மாடி 'ஏசி'க்கள் மேலே குயில்கள் !
அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள் !
பச்சை மரங்களின் கீழே கார்களின் வரிசை !
காய்ந்து கிடக்கும் ஆற்று வெளியில் குப்பைகள் !
தெப்பம் மறந்த குளத்தில் கிரிக்கெட் !
இன்னும் கொஞ்ச நாளில் இங்கே
இயற்கை எங்கே ? எங்கே ?

செல்வி ஷங்கர்

Wednesday, June 23, 2010

அந்த மொழி அதுவாய்க் கேட்குமா ?

என்ன சொல்கிறார்கள் இவர்கள் ?
ஒன்றும் புரியவில்லை எனக்கு !
இருக்கு என்கிறார்களா ? இல்லை
இருந்தது என்கிறார்களா ?
எத்தனையோ கோடியில்
எழுப்பப்படுவதெல்லாம்
இவனுக்கு எழுதப் பயன்படுமா ?
தெரியாத ஒன்றைத் தெரிவிக்குமா ?
அம்மா நா(ன்) பள்ளி செல்கிறேன்
என்ற மொழி அதுவாய்க் கேட்குமா ?


செல்வி ஷங்கர்

Wednesday, May 12, 2010

ஊட்டி மலையில் உறவுகள்

பதிவர் உயர்திரு லதானந்த், இணைய நண்பர்களை குடும்பத்துடன், இரண்டு மூன்று நாட்கள் அவரின் விருந்தினராக, ஊட்டியில் வந்து தங்கி, வெம்மையைச் சற்றே மறந்து, உதகையின் குளுமையில் மகிழ்ந்து செல்லுமாறு அன்புடன் அழைத்து இருந்தார். அவ்வழைப்பினை ஏற்றுச் சென்ற சுற்றுலாப் பதிவு.

அது ஒரு அந்தி மாலைப் பொழுது ! அதுவும் மழைத் தூறல் சாரல் அடிக்கும் மாலை! சில்லென்ற காற்று வீசும் உதகை மலைச் சாலை ! வலைப்பதிவர்கள் சிலரைத் தாங்கிச் செல்லும் சிற்றுந்துகள் ! அழகான மச் சூழல் ! மரங்கள் அசைந்து வரவேற்கும் புல்வெளிக்கிடையே வீற்றிருக்கும் விருந்தினர் இல்லம். அங்கே ஒவ்வொருவராக வந்து சேர்ந்த பதிவர் குடும்பங்கள். ஆம் ! பிள்ளை குட்டிகள் மற்றும் துணைவியோடு வந்தனர். அறிமுகமே இல்லாத முகங்கள் - ஆனால் புன்னகைக்கும் உள்ளங்கள் ! புருவம் உயர்த்தும் புன்சிரிப்புகள்.கட்டித் தழுவி கை கொடுத்து மகிழும் ஐந்து குடும்பங்கள். ஆறாவதாய் வந்திணைந்த இளையவர் ஒருவர். இந்த இருபத்தொருவரையும் ஒருங்கிணைத்த உள்ளத்தார் லதானந்த்.

முன்பின் அறிந்திராத குடும்ப உறுப்பினர்கள் ! குடும்பத் தலைவர்கள் மட்டுமே வலைப் பதிவால் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் ! புன்னகைக்கும் முகங்களாய் ஒரு 30 மணி நேரத்தைச் செலவிட்ட பதிவர் குடும்பங்கள் ஆறும், ஐந்து விரல்கள் உள்ளங்கையில் இணைந்தது போல் உண்டு - உடுத்தி - உறைந்து - கண்டு - களித்து - கனிவாய் மலர்ந்து - இருந்த மலைப்பகுதி ! மலையை - மரங்களை - பள்ளத்தாக்குகளை - சிற்றருவிகளை - சிறு ஓடைகளை - பெரிய ஆற்றுப் படுகையைக் கண்டு மகிழ்ந்து காலாறச் சென்றனர்.

இருபத்தோறு பேரும் ஒரு மகிழ்வுந்தில் பாடி - பேசி - பழகிச் சிரித்து - மகிழ்ந்து - மரங்கள் அடர்ந்த் காட்டு வழியைக் கடந்து - கனிவான காட்சிகளை க்ண்ணுக்குள்ளும் புகைபப்டக் கருவிக்குள்ளும் அடக்கி - பெருமணற் பரப்பைக் காணச் சென்றனர். ஏறி இறங்கிய மலைப்பகுதியும் - சிற்றோடைப் பரப்பும் ஒரு புதிய அனுபவம் - புன்னகைக்கும் உள்ளங்களுக்கு !

விண்ணின் மழை மன்ணில் கலப்பது போல் - மலைக்காற்று - மரங்களிடைப் பரவி மண்ணை அடைவது போல் - கோவை - மதுரை - திருப்பூர் - திருச்சி என்று எங்கெங்கிருந்தோ வந்து இந்த ஊட்டி மலையில் உறவுகளோடு நட்பு மணம் பரப்பி, பேசி மகிழ்ந்த உள்ளங்கள் ! வயது வேறுபாடு இல்லை - நாலு, ஆறு, பத்து வயதுக் குழந்தைகளோடு, ஆடிப்பாடி மகிழ்ந்து - இளைஞர்களோடு பேசாமல் பேசி உறவாடி - பதிவர்கள் ஒருவருக்கொருவர் பேசி மகிழ - குடும்பங்கள் உறவாடி மகிழ்ந்தன !

ஒரு நல்ல பொழுதைப் போல் காலத்தைக் கணக்கிட்டு ஒரு வினாடி -வினா - குறும்படக் காட்சி இரவுப் பொழுதை இனிய பொழுதாய் ஆக்கிற்று. வளரும் தலைமுறையினர் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். பெற்றோரும் பிள்ளைகள் முன் பிள்ளைகளாய் மகிழ்ந்தனர். இயற்கை வளம் நிறைந்த இந்த நிலப்பரப்பில் நாம் அறிந்திராத அதிசயப் பறவைகள் - விலங்குகள் - மரங்கள் - செடி கொடிகள் - மக்கள் - கடல் - ஆறு - மலை என நாம் அறிய வேண்டிய இயற்கை வளச் செய்திகள் அவை.

காலைப் பொழுதில் காட்சிகள் காண மகிழ்ந்து சென்ற உள்ளங்கள் மலைப் பகுதியில் மகிழ்வான மதிய உணவுக்குப் பின் கலந்து கொள்ள ஒரு குறுக்கெழுத்துப் புதிர். பெண்கள் அமர, ஆண்கள் பரிமாறிய பாச உணவு ! குடும்பங்கள் இணைந்து குழுவாய்ப் பிரிந்து நடத்திய போட்டி ! வெற்றி தோல்விகள் மனிதனைப் பிரித்து விடுகின்றன என்று போலும் முடிவுகள் அறிவிக்கப் படாத அன்புப் போட்டி !

ஒருவரா இருவரா - இருபத்தோறு பேரையும் ஓரிடத்தே அமர்த்தி - உணவிட்டு - உறங்க இடம் அளித்த உள்ளங்கள் உயர்ந்தன தான் ! இணைந்த நட்புகளும், ஏற்றத் தாழ்வுகளை மறந்து மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து உணர்வுகளை - உணவுகளை பகிர்ந்துண்ட காட்சி இன்னும் மக்கள் இங்கே இயல்பாய்த் தான் இருக்கின்றனர் என்பதை உணர்த்திற்று எனக்கு ! உள்ளத்திற்கு உவப்பான் ஒன்று கூடல் இது !

உள்ளங்கள் உயரட்டும் ! உறவுகள் வளரட்டும் !

கலந்து கொண்ட குடும்பங்கள் :

திரு லதானந்த்
திருமதி லதானந்த்
திரு பாலாஜி லதானந்த்

திரு சீனா
திருமதி செல்வி ஷங்கர்

திரு "நிகழ்காலத்தில்" சிவா
திருமதி சிவா
குழந்தைகள் - அசுவதி - ரிதனி

திரு வேங்கட சுப்ரமணியன்
திருமதி வேங்கட சுப்ரமணியன்
மகன்கள் - வசந்த பாரதி மற்றும் விபின் சந்தர் பால்

திரு தமிழ்மணம் காசி
திருமதி காசி
திருமதி காசியின் சகோதரி
குழந்தைகள் சதீஷ், காயத்ரி, லாவண்யா மற்றும் ஒரு மழலை.

திரு கொல்லான்

அரும்பாடு பட்டு, அழைத்து, திட்டமிட்டு, ஏற்பாடுகள் பல செய்து, ஒரு சிறு குறை கூட இல்லாமல் திறம்பட - குடும்பங்களை ஒருங்கிணைத்த - திரு லதானந்த், திரு பாலாஜி லதானந்த் மற்றும் திருமதி லதானந்த் அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்.

செல்வி ஷங்கர்.

Tuesday, February 16, 2010

பாலே நடனமாடு ....!

ஏழு மாதமே ஆன எங்கள் பேத்தியின் அருகில் இருந்த போது தோன்றிய சிந்தனைகள்
-------------------------------------------------------------------------------

சின்னக் குழந்தையைப் பார்க்கையில் அதிலோர் மகிழ்வு !

அதன் புன்னகை தவழும் கன்னக்குழியை நோக்குகையில் அகிலமே நம் காலடியில் !

கையணைத்து, காலுதைத்து, கண்கள் நோக்கி, சிரிக்கையில் நம் இதயமே மென்மலர் ஆகிறது !

கற்றைக்குழல் கைகளில் பிடித்து கன்னம் ததும்பப் பார்க்கையில் படைப்புகளே நமக்காகத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது !

கை தட்டு ! கை தட்டு ! என்ற உடன் அந்த சின்னஞ்சிறு விரல்கள் நீள, காற்றெனத் தட்டும் ஒலி ! அப்ப்ப்ப்பா !

தென்றலுக்கு எப்படி இந்த மென்மை வந்தது !

தவழவே தெரியாத தளிர்க் கால்கள் உதைக்க 'பாலே' ஆடு என்றதும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, வளைத்து, சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகமே இந்திர லோகம் தான் !

அதெப்படி குழந்தையின் உருவில் இறைவன் இயற்கையைப் படைத்தான் !

இன்னும் வளருது உலகம் வானம் நோக்கி !

வாழ்த்த வேண்டாமா பிஞ்சுக் கைகளை !

வாழ்க ! வாழ்க ! வாழ்க வளமுடன் !

செல்வி ஷங்கர்

Sunday, February 7, 2010

வாசகர்களின் எதிர்பார்ப்பு

வலைப்பூக்களில் இடுகைகளைப் படிக்கும் வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ?


விரல்கள் பட்டனைத் தட்டினால், கண்கள் பதிவுகளில் பார்வையைச் செலுத்தினால் சிறிது நேரம் நம் நினைவுகள் அவ்வரிகளில் நிலைக்க வேண்டும். படித்தால் சற்று மனதிற்கு மகிழ்வாக இருக்க வேண்டும். மிகவும் நம் சிந்தனையைக் குழப்பக்கூடாது. மொக்கைகள் கூட சிரித்த உடன் சில கருத்துகளை நம்மை அறியாமல் பின்னூட்டம் இடச் செய்ய வேண்டும்.


பதிவர்களின் எண்ண ஓட்டங்கள் நம் வாசகர்களின் எதிர்பார்ப்புகளில் நீந்த வேண்டும். வேடிக்கை என்றாலும், விளையாட்டு என்றாலும், வினோதம் என்றாலும், படப்பதிவுகள் என்றாலும், கற்பனைக் கதைகள் என்றாலும், காவிய ஓட்டங்கள் என்றாலும் வாசகர்கள் மனதிற்கு ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


ஓடி வந்து இடுகைகளில் பார்வையைச் செலுத்தினால் தன் வெளியுலகச் செயல்களில் இருந்து தனக்கொரு விடுதலை கிடைக்காதா என்று எண்ணுகிற வாசகர்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். படைப்புகள் சில வாதாட வைக்கும்; சில மறுப்புணர்ச்சி காட்டும்; சில சிந்தனையின் சிதறல்களாய் வியப்பூட்டும்; சிலவற்றில் சீற்றமும் எதிர்ப்பும் எழுத்துகளாய்ப் பூக்கும். அவற்றை வாசகர்கள் ஏற்கிறார்கள்; மறுக்கிறார்கள்; உடன்படுகிறார்கள்; உறவாடுகிறார்கள்.


எங்கோ ஏதோ ஒன்றில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் இரவு நேரத் தூக்கத்தைக் கூடத் துறந்து இடுகைகளில் கண்ணோட்டம் இடுகிறார்கள் என்றால் அதில் அவர்களின் எதிர்பார்ப்பும் உண்டு அல்லவா. கருத்துகள் பயனுள்ளதாய் இருந்தால் செலவிடப்படும் நேரங்கள் சிறந்ததாகின்றன. பொழுதுபோக்குதான் ஆனாலும் புறஞ்சொல்லல் கூடாதே ! அழச் சொல்லி இடித்துரைக்கும் நட்பும் இங்குண்டு ! தட்டிக்கொடுத்து சிந்தித்து மகிழ்கின்ற நட்பும் இங்குண்டு ! பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசி மகிழ்கின்ற நட்பும் இங்குண்டு ! முகம் தெரியாமல் முகிழ்கின்ற கருத்துகளை முழுவதுமாய் வடிக்கின்ற நட்பும் உண்டு !


எவற்றை எல்லாம் எப்படி எல்லாமோ அறிந்திருந்தாலும் தமிழில் தட்டுகின்ற எழுத்துக்கு ஓர் உணர்வு உண்டு. எதை எப்படி சொன்னாலும் தமிழில் அதற்கோர் அறம் உண்டு. அன்பு பயவாத, அறிவு புகட்டாத, அறத்தை உணர்த்தாத, ஆற்றல் விளையாத, எதையும் தமிழன் எழுத்து வடிவில் ஏற்க மாட்டான். இது மொழி உணர்வு ! இம்மொழியைப் பேசுகின்ற ஒவ்வொருவரும், எழுதுகின்ற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நற்பயனை எதிர்பார்க்கிறார்கள். அது சிந்தைக்கும் செயலுக்கும் சற்று நலம் பயப்பதாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். எதிர் பார்ப்பு இல்லாத எந்தச் செயலும் ஏமாற்றம் தானே !


ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாய் ஆக்குகின்ற வலைநட்பு, இடுகைகளில் படிப்பவர் உள்ளங்களைக் காண வைக்கின்றது. வாசகர்கள் படைப்புகளில் பார்வை செலுத்தும் போது அவை சுவையுடையதாய்ச் சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மிக நீளமாக, பொறுமையைச் சோதிக்கக் கூடிய பக்கங்களில் கருத்துப் புதையல்கள் இருக்கின்றன. ஆனால் அவை சுருக்கமாக இருந்தால் மட்டுமே வாசகர் அனைவருமே அவற்றைப் படிக்கின்றனர். எழுதி அஞ்சல் செய்யப்படாத அஞ்சல்களாய் இருப்பதை விட அவை எழுதப்படாமலேயே இருந்திருக்கலாம். வாசகர்கள் குறும் படைப்புகளை விரும்பிப் படிக்கின்றனர். நீண்ட படைப்புகள் சுவையூட்டக் கூடியதாயும் படிக்கத் தூண்டுவதாயும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

பதிவர்கள் பலவிதம் என்று ஒரு இடுகை ஏற்கனவே இட்டிருக்கிறேன்.

இரண்டையும் படித்து, கருத்துக் கூறுங்களேன் !

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
செல்வி ஷங்கர்